Monday, February 1, 2010

சராசரிக்கும் சற்று மேலே..





இந்த வலைப்பூவைத் துவங்கும் எண்ணம் போன நிமிடம் வரை இல்லை. சில நிகழ்வுகளை, சில மனிதர்களை, சில அணுகுமுறைகளை, முக்கியமாக சில தோழிகளை பார்க்கையில் முதலில் மிக விசித்திரமாய் உணர்ந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இவை எல்லாம் என் கண்களுக்கு வெகு தொலைவில் வேறு யாருக்கோ எங்கோ நிகழுபவை என்ற மாயை நீங்கிக்கொண்டிருக்கும் கட்டத்தில் இருக்கிறேன். நான் சராசரியான பெண் இல்லை என்று தெளிவாய் என் இந்த இருபத்தாறு வயது வரை அடித்தல் திருத்தலற்று தீர்மானமாயிருந்திருக்கிறேன். இப்பொழுது எல்லா பெண்களையும் போல திருமணம் முடித்து, புதிதாய் பூத்திருக்கும் பூ போல தன் அழகு, நளினம், கம்பீரம், முதிர்ச்சி, தன்னம்பிக்கை எல்லாம் கொண்டு மிக மகிழ்ச்சியான உலகத்திற்குள் நுழைந்து, பிறகு அனேகம் பெண்களை போல நினைத்தவை எல்லாம் நடப்பவையல்ல என்பதை மெல்ல உணர்ந்து, தான் சராசரி அல்லள் என உறுதியாய் நம்பிக்கொணிடிருந்தவள் நினைவறிய சராசரி ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், மகிழ்ச்சி, மகிழ்ச்சி மகிழ்ச்சி என உள் நுழைந்து, புன்னகைக்க கூட அச்சப்படும் மனிதர்களை காண்கையில், புன்னகைப்பதே வேசித்தனமாய் கருதுபவர்களின் நடுவே, சராசரியாய் முழுதாய் மாறிவிட மனமுமில்லாமல், சராசரிக்கு அப்பால் நகர்வதற்கான போராட்டங்களின் கனமும் தெரியாமல்
அடுத்து என்ன என்று திகைத்து நிற்கும் நான்.

இதற்கு முன்னான என் வாழ்வில், அல்லது இதற்கு அப்பார்பட்ட என் வாழ்வில் நிறைய நிறங்களிலான மனிதர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களோடு கூட. ஆனால் அவர்களால் கூட எனக்கு எந்த மன உளைச்சல்களும் இல்லை. அவர்களின் பார்வையிலான நான் களையானவள். கூர்மையானவள். தைரியமிக்கவள். வாஞ்சையோடு கூடிய அன்பு செய்பவள். இத்தனை காலமாய் இது தான் நான் என நானும் நம்புகிறேன். இவைகளோடுதான் எனக்கு நேர்ந்த பெரும் சவால்களை கடந்தேன். ஆனால் இந்த வலைப்பூவில் எழுத எனக்கு வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவை எனக்கு பிடிக்காத என்னை பற்றியனவை. நான் அல்லாத நான் எழுதுபவை. ஆகையால் எனக்கு பெயர் இல்லை. என் போன்ற அநேகம் பெண்கள் இந்த நிலையில் இருப்பதால், வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதால், அத்தனை பெண்களும் நானே.

இந்த பூ பெண்ணியம் பேசவில்லை. எனக்கு ஆண்களை பிடிக்கும். ஒரு குழந்தையாகவோ தந்தையாகவோ அதிகாரமான முதலாளியாகவோ, பித்து பிடித்த காதலனாகவோ சட்டென உறுமாறும் வரம் அவர்களுக்கு கிட்டியிருக்கிறது. பெண்ணியம் பேசும் பெண்களே கூட ஆண்களை வெறுப்பதில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் ஆண்களிடம் தங்கள் தேவைகளை சற்று ஆவேசத்துடன் பறிக்க முயல்கிறார்கள் அல்லது ஆக்ரோஷமாய் தங்கள் இருத்தலை காட்டுகிறார்கள். விடுத்து, இது நான். இது உன்னிடம் எனக்கு பிடிக்கும், இப்பொழுது உன்னிடம் இதை எதிர்பார்க்கிறேன், இந்நிமிடம் உன் கரம் கோர்க்க பிரியப்படுகிறேன், இன்று இலக்கற்று காலம் உறைய வானம் பார்த்து கிடக்க நினைக்கிறேனென பெண்ணின் மிக சூட்சமமான மனதின், ஆண்கள் நுழையத்தயங்கும் அல்லது இன்னும் கண்டறியாத பெருவெளியில் இருப்பவற்றை நான் உணர்ந்த வகையில்/வரையில் இங்கே எழுத திண்ணம். இது முதல் நாள்.

No comments:

Post a Comment